கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மே 31ம் தேதி வரை மத்திய அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. 50 நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் பொது ஊரடங்கால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே, குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பயணத்தில் இறந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்திருந்தன. ஐடி ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்தே பணியாற்றினர். தற்போது, தொழிற்சாலைகள் 100 பேருடன் இயங்கலாம் என்று தமிழக அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியுள்ளது.


இந்த ஊரடங்கு காலத்தில் மாதச்சம்பளம் வாங்குவோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, “ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் சம்பளப் பிடித்தம் செய்யக்கூடாது; கட்டாயம் சம்பளம் வழங்க வேண்டும்” என்று கடந்த மார்ச் 29ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.


இதற்கெதிராக, நாக்ரீகா எக்ஸ்போர்ட்ஸ், பிகஸ் பேக்ஸ் ஆகிய நிறுவனங்கள், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடுத்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்குமாறு நிறுவனங்களை கட்டாயப்படுத்தக் கூடாது” என்று உத்தரவிட்டனர்.


இந்நிலையில், தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளம் வழங்க வேண்டும் என்று மார்ச் 29ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு நேற்று(18ம் தேதி) திரும்பப் பெற்றுள்ளது.  அத்துடன் 2005ம் ஆண்டு பேரிடர்கால நிர்வாகச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவையிரண்டும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவின் சாலையோரங்களில் தினந்தோறும் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகளிடம் எந்த முறையான திட்டங்களும் இல்லை.

மற்றொருபுறம் தொழில் நிறுவனங்களில் மாதச்சம்பளம் வாங்குவோருக்கு பேரிடியாக, சம்பளம் கொடுக்கச் சொல்லி நிறுவனங்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது. மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இந்த நாட்டின் செல்வங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் மத்திய அரசு அவர்களை கைகழுவி விட்டுள்ளது.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here