‘காவிரி டெல்டா’ என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்றும் இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

சேலம் மாவட்டத்தில் நேற்று கால்நடைப்பூங்காவின் திறப்புவிழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது என்று உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்தது திமுக என்றும் முதலமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன்.கூறுகையில், ”எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு ஆறுதல். பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கிடைத்த வெற்றி. இந்த அறிவிப்பால் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என நம்புகிறோம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஓ.என்.ஜி.சி செயல்பாடுகளைக் காவிரி டெல்டா பகுதிகளில் தடுத்து நிறுத்த வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், ”ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவந்தால் விவசாயம் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது. இந்த திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல விவசாயத்தை லாபகரமாக தொழிலாக மாற்றவேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை சட்டமாக மாற்றவேண்டும்,”என வலியுறுத்தியிருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுள்ள பூவுலகு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தராஜன், “பெட்ரோல் தொடர்பான நடவடிக்கைகளை முழுவதுமாக காவிரி பகுதியில் நிறுத்துவார்கள் என நான் நம்பவில்லை. ஆனால், ஹைட்ரோகார்பன் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. குறைந்தபட்சம் தேர்தலை மனதில் வைத்தாவது ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளைக் காவிரி பகுதியில் மேற்கொள்ளமாட்டார்கள் என நம்புகிறோம், அத்தோடு முதலமைச்சர் அமைச்சரவையைக் கூட்டி இதற்கான அவசர சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டும் என்கிறார்.

இந்நிலையில் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், “இந்த அறிவிப்புக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சிதான். ஆனால், எங்களுக்கு சில சந்தேகங்களும் இருக்கிறது,” என்கிறார்.

மேலும் “கடந்தாண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றார் அல்லவா? அப்போது ஒரு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி அவர்கள் 50 ஆயிரம் கோடி வரை இங்கு முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன்படி அவர்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் கெமிக்கல் வளாகத்தை அமைக்கப் போகிறார்கள். இதுதான் எங்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து  கூறும்போது, “தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய எல்லா எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ், திமுக, பொதுவுடமைக் கட்சிகள் என்று அனைத்துக் கட்சிகளும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் வாழக்கூடிய மக்கள், விவசாய அமைப்புகள் ஆகியோர் மூலம் பலநாள் போராட்டம் நடந்திருக்கிறது.

மத்திய அரசு நாங்கள் எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம் நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்துவோம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி அரசு அறிவிப்போடு நிறுத்தாமல் அரசாணை வெளியிட்டு சட்டமன்றத்திலும் இதனை தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசு இதை மீறி திட்டத்தை செயல்படுத்தினால் அதை எதிர்த்து செயல்படக் கூடிய முடிவோடு இருக்க வேண்டும்.

அறிவிப்பு மட்டும் பயன் தராது. முழுமையாகச் செயல்படுத்த முன் வர வேண்டும். காவிரி டெல்டாவை ஒட்டி இருக்கின்ற பிற பகுதிகளையும் இதில் சேர்த்து விவசாயம், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை” என்றார்.

இதைத்தொடர்ந்து காவிரி டெல்டா காப்பாற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here