2011ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், தனக்கு இந்தி தெரியாததால் ‘தமிழர்கள் தீவிரவாதிகள்’ என்று சொல்லி அங்குள்ள அதிகாரிகள் அவமானப்படுத்தியதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
அண்மையில் ஆனந்த விகடன் இதழுக்கு திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே அரசு என ஒற்றைத்தன்மையை நோக்கி இந்திய அரசியல் நகர்வதாக நீங்க பார்க்கிறீங்களா?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், ‘‘ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்கின்ற, ஒரு மொழி பேசுகின்ற, ஒரு பண்பாடு, ஒரு கலாசாரம் கொண்ட மக்கள் கூட்டத்தைத்தான் ஒரு நாடுன்னு வரையறுக்குறாங்க. இந்த வரையறையின்படி பார்த்தால் நாம் பல நாடுகள் சேர்ந்த ஒரு ஒன்றியம். ஒரு வசதிக்காக ஒன்றாகச் சேர்ந்து இந்தியாவா இருக்கோம். இந்தியர்கள் என்பதில் பெருமையோடு இருக்கோம். அதுல எந்த சந்தேகமும், மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த நாட்டை இந்த வேறுபாடுகளோடுதான் அரவணைச்சுப்போகணும். அப்பதான் இந்த நாடு அழகோடு, வீரியத்தோடு, வலிமையோடு இருக்கமுடியும்.

சமீபத்துல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு. 2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி… எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா… கியா… யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார்.
நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்… யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி… நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார். ‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்… இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை.
45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும்” என்று கூறினார்.