உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கருதப்படும் இந்தியாவுக்கு, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இரண்டாவது முறையாக பிரதமராகி இன்றுடன் ஒரு வருடம் 3 நாட்களாகிறது. தனது ஒர் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி இந்திய நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் துவக்கத்திலேயே நகைச்சுவை ஊட்டும் விதமாக,“சாதாரண நாட்களில், நான் உங்கள் அருகில்தான் இருந்திருப்பேன். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் அதை அனுமதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா மட்டும் இல்லையென்றால் மோடி மக்களோடு இருந்திருப்பாரா..? அல்லது உலகப்பயணம் மேற்கொண்டிருப்பாரா..? என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
உலகம் சுற்ற 4000 கோடி செலவு:
ஏனென்றால், கடந்த ஆட்சியின்போது தன்னுடைய வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் 4000 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டது. அந்த பயணங்களால் அதானிக்கு ஆஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்கம் கிடைத்தது, ஏழை இந்தியர்களுக்கு என்ன கிடைத்தது..? சரி அதுகிடக்கட்டும்.
மோடி தனது இரண்டாவது இன்னிங்ஸான இந்த ஒர் ஆண்டில் செய்ததது என்ன..? என்பதை பார்ப்பதற்கு முன்னதாக மோடியின் முதலாவது இன்னிங்ஸின் இறுதி ஆட்டைத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம்:
2017-18ம் ஆண்டிற்கான தேசிய ஆய்வு மாதிரி அலுவலகம் நடத்திய ஆய்வு முடிவுகள் 2019ல் வெளியானது. அந்த ஆய்வறிக்கையானது, கடந்த 45 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது என்றது.
கார்கள் தொடங்கி 5 ரூபாய் பார்லேஜி பிஸ்கட்கள்கூட விற்பனையாகவில்லை என்று கார்ப்பரேட் முதலாளிகள் ஆதங்கப்பட்டார்கள். ஆட்டோமொபைல்ஸ் துறை முழுவதுமாக சீட்டுக்கட்டைப்போல் சரிந்து விழுந்தது. 3.5 லட்சம் தொழிலாளர்கள் 2018-19 ஆண்டிற்குள்ளாகவே வேலை இழந்தார்கள்.
8.82 லட்சம் குழந்தைகள் மரணம்:
மோடியினுடைய முதல் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 5 வயதிற்குட்பட்ட 8 லட்சத்து 82ஆயிரம் குழந்தைகள் செத்து மடிந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை சொல்லியது. இப்படி, நாடு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்தபோது, பொருளாதார நெருக்கடியே இல்லை என்று சாதித்து வந்தார்கள் பாஜகவினர்.
பிளான் ஆஃப் ஆக்ஷன்:
இந்தநிலையில்தான் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கியது. முதலாவது ஆட்சிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே, அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் செய்யவேண்டிய வேலை என்னென்ன என்பதை “பிளான் ஆஃப் ஆக்ஷன்” என்ற பெயரில் ஒவ்வொரு துறையும் தயார் செய்யக்கோரி ஏற்கனவே மோடி அரசு உத்தரவிட்டிருந்தது.
அதெப்படி, தேர்தலுக்கு முன்னெரே, அடுத்த ஆட்சிக்காலத்தில் செய்ய வேண்டியதைப் பற்றி மோடி திட்டமிட்டார் என்று உங்களுக்கு கேள்வி எழலாம்..? ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் தொலைநோக்கு பார்வையே இதில்தான் அடங்கிறது. ஏனென்றால், 543 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு வெளியானபோது, அதில் 350 இடங்களை பாஜக வென்றது.
பாஜகவின் தேர்தல் தில்லுமுல்லு:
குறிப்பாக, 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகளே அதிகம் என்பது தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளில் ‘தி கிவிண்ட்’ ஊடகத்தினர் கண்டறிந்தனர். இந்த 373 தொகுதிகளில் 220 தொகுதிகள் பாஜக வெற்றிபெற்ற தொகுதிகளாகும். இது தொடர்பாக தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஏற்கனவே திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக தனது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் 100 ஆண்டு ‘இந்துராஷ்ட்ரா’ கனவை நனவாக்க களமிறங்கியுள்ளது. பார்ப்பனிய மேலாதிக்கம் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் திட்டம்தான் இந்துராஷ்ட்ரா அல்லது அகண்ட பாரதம்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்:
அதனுடைய முதல்படியாக, கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆகஸ்டில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கினார்கள். கடந்த ஆகஸ்ட் தொடங்கி தற்போதுவரை காஷ்மீரில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் தேசவிரோத குற்றச்சாட்டில் கொரோனா காலத்திலும் கைது செய்யப்படுகின்றனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்தது என்பது, இந்திய கூட்டாட்சித்தத்துவத்தின்மேல் விழுந்த சவுக்கடி. இதற்கு, அரசியல் கட்சியினர் ‘அறிக்கைகளாக’ தனது எதிர்ப்பை காட்டினர்.
தேசிய கல்வி மறுக்கும் கொள்கை:
அதைத்தொடர்ந்து, தாய்மொழியை மறுத்து, சமஸ்கிருத மேலாண்மையுள்ள குருகுலக்கல்வி, 5-8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வு என்று மாணவர்களை மாற்றும் ‘நவீன கொத்தடிமைகளாக’ தேசிய கல்விக் கொள்கை வரைவை அறிமுகப்படுத்தி, அதை அமல்படுத்த தொடங்கியது.
கார்ப்பரேட்டுகளுக்கு கேள்விகேட்காத கூலி அடிமைகளையும், ஆயிரம் ஆண்டுகால வர்ணாஸ்ரம தர்மத்தையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கல்விக்கொள்கை ‘இந்துராஷ்டாரா’வுக்கான கல்வி கொள்கை.
பாபர் மசூதி தீர்ப்பும் மதநல்லிணக்க போதனையும்:
இதற்கெதிராக, மக்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் பாபர்மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியானது. “இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே ராமர் கோயில் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால், பாபர் மசூதி இடமானது ராம் லல்லாவுக்கே சொந்தம்” என்று விநோத தீர்ப்பு வெளியானது.
அரசியல் கட்சியில், குறிப்பாக, நாம் தமிழர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளும், இயக்கங்களில் மக்கள் அதிகாரம் மற்றும் மே 17யைச் சேர்ந்தவர்கள் வன்மையாக கண்டித்தனர். போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், கோடிக்கணக்கான உறுப்பினர்களை வைத்துள்ள பெரிய கட்சிகள் இது ‘மதநல்லிணக்கமான தீர்ப்பு’ என்று வரவேற்றனர். இஸ்லாமியர்கள் அமைதி காக்கவேண்டும் என்று லத்தி முனைகளில் அவர்களது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது.
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள், ஆனால் இம்மியளவும் மோடி அரசுக்கெதிரான போராட்டங்கள் மக்கள் திரள் போராட்டங்களாக மாறவில்லை. இது மோடி அரசுக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் துணிச்சலை கொடுத்தது.
மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டம்:
இந்த துணிச்சலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்தார்கள். 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்தினை மத அடிப்படையில், குடியுரிமை வழங்கும் சட்டமாக மாற்றி இந்துராஷ்ட்ராவுக்கு ஒரு பாய்ச்சலை நடத்திய பாஜக அரசு. இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கத்தான் இந்தச் சட்டம் என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் தவிர பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்ட திருத்தமானது அரசியல் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை வார்த்தையை கேலிப்பொருளாக்கியது. அப்போதும் அரசியல் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக ‘அறிக்கைப் போரே’ நடத்திக்கொண்டிருந்தனர்.
கட்சிகளை போராடத் தூண்டிய மாணவர் போராட்டம்:
ஆனால், ஜே.என்.யூ, ஜாமியா மிலியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற மாணவர்போராட்டங்கள் அரசியல் கட்சிகளை விதியில் இறங்கி போராட வைத்தது. பாஜக அரசோ போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதைத்தொடர்ந்து, டெல்லி ஷாகின்பாக்கில் இஸ்லாமிய பெண்கள் முன்னெடுத்த போராட்டம் முதல் சென்னை வண்ணாரப்பேட்டை வரை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ‘ஷாகின்பாக்குகளை’ உருவாக்கியது. மக்கள் திரள் போராட்டமாக மாறியது. அப்படி ‘போராடுபவர்களை சுட்டுக் கொல்லுங்கள்’ என்று மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் வெளிப்படையாக பேசினார்.
போலீஸோடு இணைந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எதிர்போராட்டங்கள் நடத்தி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போராட்டங்களில் ஜல்லிக்கட்டில் தீவைத்ததுபோல், அவர்களே தீவைத்து கலவரமாக்கினர். ஆனாலும், ஆசாதி முழக்கம் இந்திய தெருக்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
கொரோனாவை பரப்பிய நமஸ்தே ட்ரம்ப்:
இதன்நீட்சியில், கொரோனா வந்து சேர்ந்தது, கொரோனாவுக்கும் இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினர் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்தனர். தப்லிக் ஜமாத்தை கொரோனா ஃபேக்டரி என்று விஷ்வ ஹிந்து பரிஷித் தலைவர் வர்ணித்தார். ஆனால், நமேஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி மூலமாக பரப்பப்பட்ட கொரோனா பாதிப்பை பற்றி யாரும் தற்போதுவரை பேசவில்லை.
கொரோனா கட்டுப்படுத்துவதில் தனது தோல்வியை மறைக்க, ‘எச்சில் துப்பி இஸ்லாமியர்கள் வைரஸைப் பரப்புகிறார்கள்’ என்று வெறுப்பு பிரச்சாரம் செய்தனர் பாஜகவினர். இந்த வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரபு நாடுகளில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். உடனடியாக, மோடி அரசு ட்விட்டரில் இஸ்லாமிய நண்பனாக மாறியது. கொரோனாவை இஸ்லாமியர்கள் தலையிலும், பொருளாதார நெருக்கடியை கொரோனா தலையிலும் கட்டியது மோடி அரசு.
புலம்பெயர் தொழிலாளர்களின் துயரமும் மோடி அரசின் தோல்வியும்:
கொரோனா ஊரடங்கில் முறையான எவ்வித முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியது மோடி அரசு. உணவுக்கு வழியில்லாத பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளையும், கர்ப்பிணி மனைவிகளையும் தோளில் சுமந்து கொண்டு காலில் ரத்தம் வடிய வடிய 1000 கி.மீ தொலைவை நடந்தே கடந்தார்கள்.
அவர்களுக்கு முறையான பயண ஏற்பாடுகளைக்கூடச் செய்யாமல், ‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொறுமையில்லாததால் அவர்கள் நடக்கிறார்கள்’ என்றார் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, ‘புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கவலைப்படுபவர்கள், அவர்களது சூட்கேஸை தூக்கிச்செலுங்கள்’ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார்.
இந்த பயணங்களின் போது, உணவின்றி, தண்ணீரின்றி, விபத்து ஆகிய காரணங்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.இது ஒருபுறமிருக்க, இப்படி நடந்து சென்ற தொழிலாளர்களை குற்றவாளிகளைப்போல், காவல்துறை அடித்தது, நடத்தியது.
மருத்துவர்களுக்கு முறையான மாஸ்க்குகள்கூட ‘குஜராத் மாடல்’ மோடி அரசால் வழங்க இயலவில்லை. இதற்கெதிராக கேள்விகேட்ட மருத்துவர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கொரோனா காலத்திலும் தனியார்மயம்:
இவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்ற பெயரில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் என்பது அப்பட்டமான கார்ப்பரேட் சலுகைத்திட்டமாக இருக்கிறது.
இந்த 20 லட்சம் கோடிதிட்டத்தில், நபருக்கு 5 கிலோ அரிசி, குடும்பத்துக்குக்கு ஒரு கிலோ பருப்பு இவற்றை தாண்டி ஏழை மக்களுக்கு என்ன இருக்கிறது..? ஆனால், கனிம வளச் சுரங்ககள், ராணுவ தளவாட உற்பத்தி துறை என முக்கிய எட்டுத்துறைகள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்தது மத்திய அரசு.
கொரோனாவுடன் வாழப் பழங்குகள்:
பசித்தவனுக்கு வாய்க்கரிசி, பணம் படைத்தவனுக்கு 130 கோடி மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்கள் என்று நிவாரணம் வழங்கியது மோடி அரசு. இறுதியாக, கொரோனோவை கட்டுப்படுத்த இயலாத மோடி அரசு, ‘கொரோனாவுடன் வாழப் பழங்குகள்’ என்கிறது.
மோடி அரசு இந்த ஓராண்டில், கார்ப்பரேட்டுகளுக்காகவும் இந்துராஷ்ட்ராவுக்காகவும் மக்களது உரிமைகளைப் பறித்தபோது, அவர்களை லத்தி முனையிலும், துப்பாக்கி முனையிலும் அடக்கி ஒடுக்கியது.
அடிமைத்தனத்துடன் வாழ முடியுமா..?
குஜராத்தில் அதானி, அம்பானிக்காக மாநிலத்தையே தாரை வார்த்து, மதக்கலவரங்களை நடத்தியதுதான் ‘குஜராத் மாடல் வளர்ச்சி’. அந்த மாடல் இந்தியா முழுவதும் தற்போது அமல்படுத்தப்படுகிறது. இந்த ஓராண்டு ஆட்சியில் மோடி அரசு, மக்களுக்கு சொன்ன சேதி, அடிமைத்தனத்தோடு அடக்குமுறைகளுடன் வாழப் பழகுங்கள் என்பதுதான்.
ஊரடங்கு காலத்திலும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தேடித்தேடி கைது செய்துகொண்டிருக்கிறது மோடி அரசு. கொரோனாவோடு வாழ்ந்து விடலாம், ஆனால் அதைவிட கொடிய அடிமைத்தனத்தோடு எப்படி வாழ்வது..?