ஆன்மீகம்செய்திகள்

முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்…!!

கடவுள்‌ காட்சி,ஞானக்‌ கண்‌,பக்தியும்‌ பற்றும்‌...

முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்….!!

முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்

 • இத்திருநாட்டை உயர்த்தி உன்னதப்படுத்த பிறந்த யோகிகளிலும்‌, ஞானிகளிலும்‌ தேவர்‌ பெருமானும்‌ ஒருவர்‌. தேசியமும்‌, தெய்வீகமும்‌ தமது இரு கண்களாகப்‌ போற்றியவர்‌ தேவர்‌. தேசீயம்‌ உடலாகவும்‌ தெய்வீகம்‌ ஆன்மாவாகவும்‌ விளக்கம்‌ தந்த தலைவர்‌ அவர்‌, அவரை இந்த தேசம்‌ விடுதலைப்‌ போர்‌ வீரராக, தேசத்தியாகியாக, நல்ல தமிழறிஞராக, புலிக்கொடி ஏந்திய புரட்சிக்‌ கனலாக, வங்கத்தின்‌ தங்கம்‌ நேத்தாஜியின்‌ அரசியல்‌ வாரிசாக, பல்வேறு வகையில்‌ மதிப்பீடு செய்தது. 
 • அத்தனை மதிப்பீட்டிற்கும்‌ ஆதரவாக இருந்தது அவரது ஆன்மீக ஞானமும்‌ அனுபூதியும்‌ ஆகும்‌. முக்தி நெறி அறியாத ஜன சமுத்திரத்தின்‌ மத்தியிலும்‌ பக்தி நெறி அறியாத பாமர மக்களின்‌ மத்தியிலும்‌ பிறந்து வளர்ந்து உருவான தேவர்‌ அவர்கள்‌ தீர்க்க தரிசனமிக்க ஆன்மீக ஞானியாக இந்தியா முழுவதும்‌ வலம்‌ வந்தவர்‌. அந்த ஞானம்‌ இவர்‌ எவ்வாறு கைவரப்‌ பெற்றார்‌ என்பதே இக்கட்டுரையின்‌ நோக்கமாகும்‌. 
 • தன்னை அறியும்‌ வாய்ப்பு மதுரை உணவு விடுதியில்‌ தன்‌ உருவம்‌ விவேகானந்தர்‌ படத்துடன்‌ ஐக்கியமாவது போலவும்‌, மீனாட்சியம்மன்‌ கோவிலில்‌ முருகனின்‌ திருவுருவச்சிலையோடு தன்‌ உருவம்‌ ஐக்கியமாகிவிடுவது போலவும்‌ தேவர்‌ உணர்ந்த உள்‌ உணர்வுகள்‌, தேவரின்‌ ஆன்மீக வாழ்விற்கு அடித்தளமிட்டன. 
 • தெய்வத்‌ தன்மை பெற்ற மாமனிதர்களுக்கு சில சிறப்பான அனுபவங்கள்‌ வாய்த்து விடுகின்றன. அந்த அனுபவங்களே மறைந்து இயங்கும்‌ தெய்வ சக்தியை உணர்ந்து, தங்களது வாழ்வை குறிக்கோளுடைய வாழ்வாக மாற்றிக்‌ கொள்ளத்‌ தூண்டுகின்றது.

முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்

பக்தியும்‌, பற்றும்‌:

 • ஆன்மீக ஞானத்தைப்‌ பெறத்‌ தோன்றிய மகான்களின்‌ வாழ்வில்‌ உலக வாழ்வு நிலையற்றது என்பதை உணர்த்தும்‌ நிகழ்வுகள்‌ நடப்பது இயல்பே. புத்தர்‌ பிரான்‌, பட்டினத்தார்‌, காரைக்கால்‌ அம்மையார்‌ போன்ற பல ஞானியர்கள்‌ வாழ்விலும்‌ இது போன்ற நிகழ்வுகள்‌ நடந்தன. அந்த நிகழ்வுகளே அவர்கள்‌ உயர்நிலை அடைவதற்கு திருப்பு முனையாக அமைந்து விட்டன. 
 • தேவர்‌ குழந்தைப்‌ பருவத்திலே தாயை இழந்தார்‌. பள்ளிப்‌ பருவத்தில்‌ தந்தையாருடன்‌ போராடும்‌ சூழ்நிலை ஏற்பட்டது. தனது மைத்துனர்‌ தங்கவேல்‌ தேவருடனும்‌ உறவினர்‌ துரைச்சிங்கத்‌ தேவருடனும்‌ சென்று தந்தையுடன்‌ மோதும்‌ கட்டாயம்‌ ஏற்பட்டது. வெற்றிவாகை சூடிய இளைஞர்‌ பசும்பொன்‌ திரும்பினார்‌. வீட்டிற்கு வந்த அவர்‌ மனதில்‌ வெறுமை சூழ்கிறது. அந்த சூழல்‌ அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது. அதனால்‌ பசும்பொன்னார்‌ மெளனக்‌ கடலில்‌ ஆழ்ந்தார்‌. உலகம்‌ தன்மை விட்டு ஒதுங்கும்‌ நிலையில்‌ உன்‌ மத்தம்‌ பிடித்தவர்‌ போல்‌ உட்கார்ந்திருந்தார்‌.
 •  அவரது மெளனம்‌, அவரது முகத்தில்‌ பூத்த அமைதி, அவரது கண்ணில்‌ தோன்றிய ஒளி, சூழ இருந்தவரை சும்மாயிருக்க விடவில்லை. தேவர்‌ மகனுக்கு ஏதோ ஆகி விட்டது எனத்‌ துடித்தார்கள்‌. இந்த நிலையை பிரபஞ்ச வெறுப்பு நிலை என்றும்‌ கூறலாம்‌ அல்லது சமாதி நிலை என்றும்‌ கூட குறிப்பிடலாம்‌. இந்த அக அனுபவ நிலையே எது வரினும்‌ தாங்கிக்‌ கொள்ளும்‌ பண்பினையும்‌, பற்றற்று சேவை செய்யும்‌ கர்மயோகக்‌ கலையையும்‌, பின்னாளில்‌ அவருக்கு வழங்கியது. அவரை அன்புடன்‌ போற்றிப்‌ பாதுகாத்த பாட்டையா திரு. குழந்தைசாமி பிள்ளையவர்கள்‌அவரை உற்று நோக்கினார்‌. அடுத்தது காட்டும்‌ பளிங்கு போல்‌ தேவர்‌ திருமகனின்‌ தீவிர முடிவை முகம்‌ தெரிவித்து விட்டது, பேரனின்‌ உள்ளம்‌ பிரபஞ்ச வெறுப்பால்‌ பீடிக்கப்பட்டிருந்ததை பாட்டையா அப்போது கண்டார்‌. 
 • அவருக்கு அன்புடன்‌ ஆறுதல்‌ கூறி அவரைத்‌ தொட்டு அவரது உணர்வை மண்ணிற்கு கொண்டு வந்தார்‌. வீர வரலாறுகளையும்‌ காவியங்களையும்‌ படிக்க வைத்து நாட்டுப்‌ பற்றையும்‌ தெய்வீகப்‌ பற்றையும்‌ தூண்டினார்‌. இதன்‌ விளைவாக தேவருக்குள்‌ தேசியப்‌ பற்றும்‌, தெய்வீக பக்தியும்‌ மட்டுமே ஆழமாகப்‌ பதிந்தது.மெய்ப்பொருள்‌ விளக்கம்‌ தேவர்‌ பிரான்‌ இளமையிலேயே அனுபூதி பெற்ற நிலையில்‌ இருந்த போதிலும்‌ ஆன்மீக சம்பந்தமான சாஸ்திரங்களையும்‌ – நூல்களையும்‌ கற்றுத்‌ தெளிவு பெறுகிறார்‌. அதன்‌ வாயிலாக மற்றவர்களையும்‌ தெளிவு பெறச்‌ செய்கின்றார்‌. வேதாந்தம்‌, சைவ சித்தாந்தம்‌ போன்ற தத்துவ தரிசனங்களை நன்கு கற்றறிந்துள்ளார்‌.
 • இதிகாசங்கள்‌, புராணங்கள்‌, உபநிடதங்கள்‌, சங்க நூல்கள்‌, திருக்குறள்‌, திருமந்திரம்‌, சிவஞான போதம்‌, சிவஞான சித்தியார்‌, சித்தர்களின்‌ ஞானப்‌ பாடல்கள்‌, குணங்குடி மஸ்தான்‌ பாடல்கள்‌, ரோமர்‌ கண்ட ஏழாயிரம்‌, போகர்‌ பன்னீராயிரம்‌, அகஸ்தியர்‌ நூல்கள்‌ போன்றவைகளிலிருந்து தனது ஆன்மீக சொற்பொழிவுகளில்‌ மேற்கோள்‌ காட்டுகிறார்‌.
 •  தத்துவ நூல்கள்‌ கூறும்‌ பிரமாணங்கள்‌ – அளவைகள்‌ – மூலமே தனது விளக்கங்களை நிரூபிக்கிறார்‌. காட்சி அளவை (பிரத்தியட்ஷ பிரமாணம்‌) கருதல்‌ அளவை (அனுமானப்‌ பிரமாணம்‌) போன்ற அளவைகளைப்‌ பயன்படுத்துகின்றார்‌. இதன்‌ மூலம்‌ அவர்‌ பெற்றிருந்த தத்துவ ஆய்வுகளைக்‌ கண்டறிய முடிகிறது. கற்ற அறிவோடு அவருள்‌ பிரவாகமாகப்‌ பொங்கிய தெய்வப்‌ புலமை – தெய்வீக அறிவால்‌ அறியும்‌ அறிவு – அவருக்கு இருந்ததும்‌ புலப்படுகின்றது. கல்வியாலும்‌ அருளாலும்‌ முற்றறிவு பெற்ற ஞானிமாவார்‌.
 •  அவருடைய நெடுங்காலக்‌ கண்ணோட்டமும்‌, தீர்க்க தரிசனங்களும்‌, நிலைத்த பொருளை உணரும்‌ தன்மையும்‌, சத்திய வாழ்வில்‌ ஏற்படும்‌ சோதனைகளை அமைதியாக ஏற்றுக்‌ கொள்ளும்‌ பக்குவமும்‌ இதன்‌ அடிப்படையிலேயே அமைந்தன. 

முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்

கடவுள்‌ காட்சி:

 • உரைகாண முடியாத ஒன்றினை, கரைகாண முடியாததின்‌ காட்சியினை, கண்டு களித்திட முடியும்‌ என்பதை எடுத்துக்காட்டுகள்‌ மூலம்‌ வகைப்படுத்தி விளக்கி அனைவரும்‌ புரிந்து கொள்ளும்‌ வண்ணம்‌ செய்கிறார்‌. 
 • உலக அறிவுக்கு ஒரு எல்லையுண்டு, எல்லாவற்றையும்‌ பொறி புலன்களைக்‌ கொண்டு அறிந்திட முடியாது. உதாரணமாக ரோஜாவினுடைய நிறம்‌, இதழ்‌, விலை, சொல்லலாம்‌. அதன்‌ வாசனையை முகர்ந்து பார்த்துத்‌ தான்‌ சொல்ல முடியும்‌. எலுமிச்சையின்‌ ருசி புளிப்பு என்பதை சுவைத்துப்‌ பார்த்துத்தான்‌ சொல்ல முடியும்‌. அதுபோல இறை சக்தியை மேலெழுந்த வாரியாகப்‌ பார்க்கவோ, உணரவோ முடியாது. மிக நுணுக்கமாக சிரமப்பட்டு பார்ப்பதற்கு மறைந்து கிடக்கின்ற ஒன்று தான்‌ தெய்வசக்தி. அந்த சக்தியைப்‌ புறக்கண்ணால்‌ பார்க்க முடியாது. அதை அகக்‌ கண்களால்‌ தான்‌ பார்க்க முடியும்‌. அந்த அகக்‌ கண்ணையே ஞானக்கண்‌ என்று கூறுகிறார்கள்‌.

முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்

 

ஞானக்‌ கண்‌: 

 • ஞானக்‌ கண்‌ உண்டா ? அது கற்பனை என்று கருதக்‌ கூடாது. கனவில்‌ காணும்‌ உருவங்களைப்‌ பார்க்கிறோம்‌. நல்ல உருவங்கள்‌ மகிழ்ச்சியையும்‌, அபாயகரமான உருவங்கள்‌ பயத்தையும்‌ ஏற்படுத்துகின்றன. அதைப்‌ பார்ப்பது எந்தக்‌ கண்‌ ? அந்த கண்‌ தான்‌ ஞானக்கண்‌. சாதாரணமாணவர்கள்‌ அந்தக்‌ கண்ணை கனவு நிலையில்‌ (சொப்பண அவஸ்தையில்‌) அனுபவிக்கிறார்கள்‌. ஞானிகள்‌ நினைவு நிலையில்‌ (ஜாக்ரத்தில்‌) அனுபவிக்கிறார்கள்‌ என்றும்‌ விளக்குகிறார்‌.
 • மனித சரீரம்‌ சாதாரணமாக இருந்த போதிலும்‌ அந்த சரீரத்திற்கு தாயாக நிற்பவள்‌ பராசக்தி. அந்த பராசக்தியின்‌ ரூபம்‌ எப்படி இருக்கிறது என்பதை நெற்றிக்‌ கண்ணை உபயோகித்துப்‌ பார்த்து மகான்கள்‌ கண்டனர்‌. இங்கு நெற்றிக்‌ கண்‌ என்று குறிப்பிடுவது ஞானக்‌ கண்ணேயாகும்‌. இதனால்‌ காணாத கடவுட்காட்சியைக்‌ காண முடியும்‌ என்று வலியுறுத்துகின்றார்‌ தேவர்‌ பிரான்‌. கண்டேன்‌ அவர்‌ திருப்பாதம்‌, கண்டறியாதன கண்டேன்‌ என்ற அப்பரடிகளின்‌ திருவாக்கினை இங்கு ஒப்பிட்டுப்‌ பார்க்க வேண்டும்‌.
 • வாழ்வியல்‌ பயிற்சி முறைகள்‌ சரியான வாழ்வியல்‌ பயிற்சிகள்‌ மூலம்‌ ஒரு தனி மனிதனை பயனுள்ள உயர்ந்த மனிதனாகவும்‌, ஒரு சமுதாயத்தை ஒப்பற்ற தெய்வீக சமுதாயமாகவும்‌, மாற்றிட முடியும்‌ என்பது இந்தியப்‌ பண்பாட்டினை உருவாக்கிய ஞானிகளின்‌ திட்டம்‌. கால மாற்றத்தால்‌ பழமை படைத்துக்‌ கொடுத்த நெறிகளின்‌ உண்மை இயல்புகளை புரிந்து கொள்ளவியலாது போயிற்று. தெய்வீக வாழ்விற்கான பயிற்சி முறைகள்‌ பக்தியோகம்‌, கர்மயோகம்‌, ஞானயோகம்‌ என்று மூன்று வகைப்படும்‌ என்று பொதுவாகக்‌ கூறினாலும்‌ சித்தர்கள்‌ கண்ட அஸ்டாங்க யோகத்தையே அதிகமாக விளக்குகிறார்‌ தேவர்‌ பிரான்‌. 
 • பக்தி என்பது அன்பு வழிபாடு, இறைவனிடம்‌ அன்பு செலுத்தி அவனுக்காக மட்டுமே வாழும்‌ வாழ்வு. ஆழ்வார்கள்‌, நாயன்மார்கள்‌ அத்தகையவர்களே. பக்தர்களது அன்பு வலையில்‌ அகப்பட்ட இறைவன்‌ அவர்களை யோகியராக்கி, ஞானியர்‌ ஆக்குகின்றான்‌ தனது அருளாற்றலால்‌. யோகக்‌ கலை என்பது தகுந்த குருவின்‌ துணையுடன்‌, தானே முயற்சி செய்து, ஆன்மாவை அறிந்து, முடிவில்‌ இறைவன்‌ தானாகவும்‌, தானே இறைவனாகவும்‌ ஆக்கும்‌ கலையாகும்‌. முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்
 • பக்தியின்‌ வாயிலாகவும்‌, யோகத்தின்‌ வாயிலாகவும்‌, அனுபூதி அடைந்த நிலையில்‌ அறியப்படுவது ஞானம்‌. இத்தன்மை பொருந்திய மக்களும்‌, அரசாள்பவர்களும்‌, அமைந்திடும்‌ சமுதாயம்‌ தெய்வீக சமுதாயம்‌. ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உணர்வினை உணர்ந்து, பிறர்‌ வாழ வழி வகுத்துக்‌ கொடுத்து, தன்‌ வாழ்வு முழுவதும்‌ சமுதாயத்திற்கு அர்ப்பணித்து, வாழ்பவர்கள்‌ பலரைக்‌ கொண்டு அமையும்‌ சமுதாயம்‌ தெய்வீக சமுதாயம்‌ என்பது அவரது உள்ளக்‌ கிடகை என்பது ஆன்மீக உரைகளை ஆய்வதின்‌ மூலம்‌ உய்த்துணரலாம்‌.

User Rating: 4.65 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button