மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட, இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றுவருகின்றன.

கொரோனா ஊரடங்கிற்குப் பின்  கிரிக்கெட் போட்டிகள் மீண்டும்  தொடங்கியுள்ளது. கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, கொரோனா நெருக்கடிகளைச் சமாளித்து நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜூலை 8ஆம் தேதி முதல் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டு விளையாட உள்ளது. இதற்காக, மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர்.

Pakistan squad announced for upcoming England tour | Jasarat

இந்நிலையில், தற்போது, பாகிஸ்தான் அணி வீரர்களும் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். சுற்றுப் பயணத்திற்கான பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் இடம்பிடித்திருந்த 10 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்லுமா? என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி சுற்றுப் பயணம் நடைபெறும் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொண்ட குழு  நேற்று திட்டமிட்டபடி இங்கிலாந்து செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளான வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை அனுப்புவது பற்றி பரிசீலனை நடைபெற்று வருவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நிர்வாகி ஒருவர், “இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் குழுவில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான வீரர்கள் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை அனுப்புவது பற்றி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். முதல்முறை கொரோனா பரிசோதனை செய்த வீரர்களுக்கு மறுமுறை பரிசோதனை செய்தபோது கொரோனா இல்லை என முடிவுகள் வந்துள்ளன. அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறும். கொரோனா இல்லை என முடிவுகள் வரும் பட்சத்தில் அவர்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இங்கிலாந்து சென்றவுடன் பாகிஸ்தான் வீரர்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைப்பார்கள். அதன்பின், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறும். அனைத்து வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்று முடிவுகள் வரும் பட்சத்தில், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here